தகடுகளை ஆயத்தப்படுத்துதல்
தொகுதி சாதனங்களுக்கான முன்னுரை
தொகுதி சாதனங்கள்
தொகுதி சாதனங்கள், பகிர்வு மற்றும் லினக்ஸ் கோப்பு முறைமை போன்ற ஜென்டூ லினக்ஸிற்கும், பொதுவாக லினக்ஸிற்கும் ஆன வட்டுக்கள் சார்ந்த இயல்புகளை இப்போது காணலாம். வட்டை பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்ட பின், பகிர்வு மற்றும் கோப்பு முறைமைகள் நிறுவலுக்காக நிலைநாட்டலாம்.
முதலில் தொகுதி சாதனங்களைப் பார்க்கலாம். SCSI மற்றும் தொடர் ATA இயக்கிகள் /dev/sda, /dev/sdb, /dev/sdc போன்ற சாதன கையாளுதல்களின் கீழ் குறிக்கப்பட்டுள்ளது. பல நவீன இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் PCI Express அடிப்படையிலான NVMe திடநிலையகங்கள் /dev/nvme0n1, /dev/nvme0n2 போன்ற சாதன கையாளுதல்களைப் பயன்படுத்துகிறது.
பின்வரும் அட்டவணை முறைமையில் குறிப்பிட்ட ஒரு வகையான தொகுதி சாதனத்தை எங்கு காணலாம் என்பதை படிப்பவர்கள் அறிந்துகொள்ள உதவும்:
சாதனத்தின் வகை | முன்னிருப்பு சாதன கையாளுதல் | ஆசிரியர் குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் |
---|---|---|
SATA, SAS, SCSI அல்லது USB flash | /dev/sda | தோராயமாக 2007 முதல் இன்று வரையுள்ள வன்பொருட்களில் காணப்படும் இது ஒருவேளை லினக்ஸில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சாதன கையாளுதலாகக் கூட இருக்கலாம். இவ்வகையான சாதனங்கள் SATA பாட்டை, SCSI, USB பாட்டை கொண்டு தொகுதி சாதனங்களாக இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, முதல் SATA சாதனத்தில் உள்ள முதல் பகிர்வு /dev/sda1 என அழைக்கப்படும். |
NVM Express (NVMe) | /dev/nvme0n1 | திடநிலை தொழில்நுட்பத்தில் புதியதான NVMe இயக்கிகள் PCI விரைவு பாட்டையோடு இணைக்கப்பட்டுள்ளது. இது சந்தையிலேயே மிகவும் வேகமான தொகுதி பரிமாற்ற வேகத்தைக் கொண்டுள்ளது. 2014 அல்லது அதற்கு பிந்திய காலங்களில் வெளிவந்த முறைமைகளில் இதற்கான ஆதரவு அளிக்கப்பட்டிருக்கும். முதல் NVMe சாதனத்தின் முதல் பகிர்வு /dev/nvme0n1p1 என அழைக்கப்படும். |
MMC, eMMC மற்றும் SD | /dev/mmcblk0 | உட்பொதித்த MMC சாதனங்கள், SD அட்டைகள் மற்றும் பல வகையான நினைவு அட்டைகள் தரவு சேமிப்பிற்குப் பயன்படுகின்றன. இருந்தாலும் பல முறைமைகள் இந்த சாதனங்கள் மூலம் துவக்குவதை அனுமதிப்பதில்லை. இவ்வகை சாதனங்களை செயல்நிலை லினக்ஸ் நிறுவலுக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இதைத் தவிரக் கோப்புகளை பரிமாறவோ, குறுகிய கால காப்புநகல்களை என்பதற்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். |
மேலுள்ள தொகுதி சாதனங்கள் வட்டிற்கான செயலாக்கமில்லாத இடைமுகத்தைக் குறித்துக்காட்டுகிறது. இதன்மூலம் பயனர் நிரல்களானது இயக்ககங்கள் SATA, SCSI அல்லது வேறு எதாவது வகையா என்பதைப் பற்றி கவலைப் படாமல் இந்த தொகுதி சாதனங்கள் வட்டோடு உரையாட முடியும். நிரல் வட்டில் உள்ள சேமிப்பகத்தை வெறும் ஒரு தொடர்ச்சியான, நேரடியாக-அணுகக்கூடிய 4096 எண்ணுன்மிகளின் (4K) தொகுதிகளின் திரளாக அணுகுகிறது.
பகிர்வு அட்டவணைகள்
கோட்பாட்டளவில் ஒரு லினக்ஸ் முறைமையை மூல, பகிர்வு செய்யப்படாத வட்டில் நிறுவ வாய்ப்புள்ள போதிலும் (எடுத்துக்காட்டாக btrfs RAID ஐ உருவாக்கும்போது) நடைமுறையில் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. பதிலாகத் தொகுதி சாதனங்கள் சிறிய சமாளிக்கக்கூடிய தொகுப்பு சாதனங்களாகப் பிரிக்கப்பட்டது. amd64 முறைமைகளில் இது பகிர்வுகள் என அழைக்கப்பட்டன. இப்போது இரண்டு தரமான பகிர்வு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன: MBR (சில சமயங்களில் DOS வட்டுக்குறி எனவும் அழைக்கப்படும்) மற்றும் GPT; இவை இரண்டும் மரபுவழி BIOS மற்றும் UEFI துவக்கச் செயல்பாடு வகைகளோடு தொடர்புடையவை.
GUID பகிர்வு அட்டவணை (GPT)
GUID பகிர்வு அட்டவணை (GPT) நிறுவல் (GPT வட்டு முத்திரை எனவும் அழைக்கப்படும்) பகிர்வுகளுக்கு 64-இரும அடையாளங்காட்டிகளை பயன்படுத்துகிறது. இதற்கான பகிர்வு தகவல்களைச் சேமிக்கும் இடம் MBR பகிர்வு அட்டவணையின் (DOS வட்டு முத்திரை) 512 எண்ணுன்மிகளை விட பெரியதாகும். இதனால் GPT வட்டில் எத்தனை பகிர்வுகள் இருக்க வேண்டும் என்பதற்கான எந்த எல்லையும் நடைமுறையில் இல்லை. மேலும் பகிர்விற்கான அளவு மிகப் பெரிய எல்லையைக் கொண்டுள்ளது (அதிகப்படியாக 8 ZiB - ஆம், ஃசெபி எண்ணுன்மிகள்தான்).
முறைமையின் இயங்கு தளம் மற்றும் திடப்பொருளுக்கு இடையில் உள்ள மென்பொருள் இடைமுகம் BIOS ஆக இல்லாமல் UEFI ஆக இருந்தால், DOS வட்டு முத்திரை முறையில் சில பொருத்தச் சிக்கல்கள் வருவதால் பெரும்பாலும் GPT கட்டாயமாகும்.
மேலும் GPT சரிகாண்தொகை மற்றும் மிகைமை செயல்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இது CRC32 சரிகாண்தொகையை பயன்படுத்தி தலைப்பு மற்றும் பகிர்வு அட்டவணைகளில் ஏதேனும் பிழை உள்ளதா என்பதைச் சரிபார்த்து பின் வட்டின் இறுதியில் ஒரு காப்புநகல் GPT ஐ வைக்கிறது. இந்த காப்புநகல் GPT ஐ பயன்படுத்தி வட்டின் தொடக்கத்தில் உள்ள முதன்மை GPT இல் ஏதாவது பழுது ஏற்பட்டால் மீட்டமைத்து கொள்ளலாம்.
GPT ஐ பற்றிய சில எச்சரிக்கை குறிப்புகள்:
- BIOS-சார்ந்த கணினிகளில் GPT ஐ பயன்படுத்தலாம், ஆனால் அதன்பின் மைக்கிரோசாஃப்ட் Windows இயங்குதளத்தை இரட்டை-துவக்க முடியாது. காரணம் GPT பகிர்வு முத்திரை இருப்பது தெரிந்தால் மைக்கிரோசாஃப்ட் Windows UEFI பயன்முறையில் துவங்க ஆரம்பித்துவிடும்.
- வழுக்கள் நிறைந்த சில தாய் பலகைகளின் திடப்பொருள் BIOS/CSM/மரபுவழி பயன்முறையில் துவக்க ஏற்கனவே உள்ளமைக்கப்பட்டு GPT முத்திரையிட்ட வட்டை துவக்குவதில் சிக்கல் இருக்கலாம்.
முதன்மை துவக்கப் பதிவேடு (MBR) அல்லது DOS துவக்கு பிரிவு
முதன்மை துவக்கப் பதிவேடு துவக்கப் பிரிவு (DOS துவக்கப் பிரிவு அல்லது DOS வட்டுமுத்திரை எனவும் அழைக்கப்படும்) முதன்முதலில் PC DOS 2.x ற்காக 1983 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது துவக்கப் பிரிவு மற்றும் பகிர்வின் நீளத்திற்கு 32-இரும அடையாளங்காட்டிகளை பயன்படுத்துகிறது. மேலும் இது மூன்று பகிர்வு வகைகளை ஆதரிக்கிறது: தொடக்கம், விரிவாக்கப்பட்டது மற்றும் ஏரணம். தொடக்கப் பகிர்வு அதன் தகவல்களை முதன்மை துவக்கப் பதிவேட்டில் அதாவது வட்டின் தொடக்கத்தில் உள்ள மிகச்சிறிய (பெரும்பாலும் 512 எண்ணுன்மிகள்) இடத்தில் சேமித்து வைத்துள்ளது. சிறிய இடமாக இது இருப்பதால் வெறும் நான்கு முதன்மை பகிர்வுகளை மட்டுமே ஆதரிக்கப்பட்டுள்ளன (எடுத்துக்காட்டாக /dev/sda1 இல் இருந்து /dev/sda4 வரை).
பல பகிர்வுகளை ஆதரிப்பதற்கு, MBR இல் உள்ள ஏதாவதொரு தொடக்கப் பகிர்வை விரிவாக்கப்பட்ட பகிர்வு எனக் குறிக்கவும். பிறகு இந்த பகிர்வில் கூடுதல் ஏரண பகிர்வுகளை (பகிர்வுகளுக்குள் பகிர்வுகள்) கொண்டிருக்கலாம்.
பெரும்பாலான தாய் பலகை உற்பத்தியாளர்களால் இன்னும் ஆதரவு வழங்கப்பட்ட வந்தாலும், MBR துவக்கப் பிரிவு மற்றும் அதற்குத் தொடர்புடைய பகிர்வு குறைபாடுகள் மரபுவழியாகக் கருதப்படுகின்றன. 2010 ற்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட வன்பொருளோடு வேளை செய்யும்போது தவிர, மற்ற எல்லா சூழல்களிலும் GUID பகிர்வு அட்டவணையை பயன்படுத்திப் பகிர்வு செய்வது சிறந்ததாகும். நிறுவல் வகைக்குச் செல்லும் வாசகர்கள் பின்வரும் தகவல்களை அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்:
- பெரும்பாலான 2010 ற்கு முந்திய தாய் பலகைகள் MBR துவக்கப் பிரிவைப் பயன்படுத்துவதை மரபுவழி துவக்கப் பயன்முறையாக (ஆதரிக்கப்பட்ட ஆனால் பொருத்தம் இல்லாததாக) கருதினர்.
- 32-இரும அடையாளங்காட்டிகளை பயன்படுத்துவதால், MBR இல் உள்ள பகிர்வு அட்டவணைகள் 2 டேரா எண்ணுன்மிகள் அளவை விடப் பெரிய சேமிப்பு இடத்தை ஏற்காது.
- விரிவாகப்பட்ட பகிர்வை உருவாக்காத வரையில், MBR அதிகபட்சமாக நான்கு பகிர்வுகளை மட்டுமே ஆதரிக்கும்.
- இந்த அமைவு காப்புநகல் துவக்கப் பிரிவை அளிக்காததால், பகிர்வு அட்டவணையை ஏதாவதொன்று மேலெழுதிவிட்டால், எல்லா பகிர்வு தகவல்களும் அழிந்துவிடும்.
கையேடு ஆசிரியர்கள் ஜென்டூ நிறுவல்களில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் GPT ஐ பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றனர்.
மேம்பட்ட சேமிப்பு
amd64 நிறுவல் குறுந்தகடு ஏரண கனவளவு நிர்வாகி (LVM) கான ஆதரவை அளிக்கிறது. பகிர்மான அமைவுகளால் அளிக்கும் நெகிழ்தன்மை LVM அதிகரிக்கிறது. மேலும் இது பகிர்வுகள் மற்றும் வட்டுக்களை ஒன்றாக்கி கனவளவு குழுக்களாக்குவதையும், மெதுவான வன்தட்டுகளுக்காக வேகமான SSD களில் RAID குழுக்களை அல்லது பதுக்ககங்களை வரையறுப்பதையும் அனுமதிக்கிறது. கீழுள்ள நிறுவல் வழிமுறைகள் "வழக்கமான" பகிர்வு செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் LVM வழியை ஒருவர் விரும்பினால் அந்த வழிக்கான ஆதரவும் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு LVM கட்டுரைக்குச் சென்று பார்க்கவும். புதிய பயனர்கள் கவனத்திற்கு: முழுமையாக ஆதரிக்கப்பட்டாலும் LVM இந்த கையேட்டின் எல்லைக்கு வெளியில் உள்ளது.
முன்னிருப்பு பகிர்வு செய்யும் திட்டம்
மீதமுள்ள கையேடு முழுவதும், நாம் இரண்டு சூழல்களான 1) GPT பகிர்வு அட்டவணை அல்லது UEFI துவக்கம் மற்றும் 2) MBR பகிர்வு அட்டவணை அல்லது மரபுவழி BIOS துவக்கத்தைப் பற்றி விவாதித்து விளக்கம் அளிப்போம். கலக்கியும் சேர்த்தலுக்கான வாய்ப்புகள் இருப்பினும், அது இந்த கையேட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டது. முன்பு கூறியதுபோல, அண்மை வன்பொருளில் நிறுவும்போது GPT பகிர்வு அட்டவணை மற்றும் UEFI துவக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு விதிவிலக்காக MBR மற்றும் BIOS துவக்கத்தை சில மெய்நிகராக்கப்பட்ட (மேக) சூழல்களில் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.
பின்வரும் பகிர்மான திட்டம் எளிமையான எடுத்துக்காட்டு தளவமைப்பாகப் பயன்படுத்தப்படும்:
பகிர்வு | கோப்பு முறைமை | அளவு | விளக்கம் |
---|---|---|---|
/dev/sda1 | fat32 (UEFI) அல்லது ext4 (BIOS) | 256M | துவக்க/EFI முறைமை பகிர்வு |
/dev/sda2 | (swap) | RAM அளவு * 2 | இடமாற்று பகிர்வு |
/dev/sda3 | ext4 | மீதமுள்ள வட்டு முழுவதும் | வேர் பகிர்வு |
இந்த தகவல் போதுமானதாக இருந்தால், மேம்பட்ட வாசகர் பின்வருவதைத் தவிர்த்து நேரடியாக உண்மையான பகிர்வு செய்தலுக்குச் செல்லலாம்.
fdisk மற்றும் parted ஆகிய இவ்விரண்டும் பகிர்வு செய்வதற்கான பயன்கூறு நிரல்களாகும். fdisk நன்கு அறிந்த, நிலையான மற்றும் MBR பகிர்வு தளவமைப்பிற்கான பரிந்துரைக்கப்பட்ட நிரலாகும். parted GPT பகிர்வுகளை ஆதரிக்கும் நிரல்களுள் முதல் லினக்ஸ் தொகுதி சாதன மேலாண்மை பயன்கூறு நிரலாகிய இது ஒரு மாற்றாக விளங்குகிறது. சிறந்த உரை அடிப்படையிலான பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதால் இங்கு fdisk பயன்படுத்தப்பட்டுள்ளது.
உருவாக்குவதற்கான வழிமுறைகளுக்குச் செல்வதற்கு முன், முதலிலுள்ள பிரிவுகள் பிரித்தல் திட்டங்களை எவ்வாறு உருவாக்குவது மற்றும் சில பொதுவான பாதகங்களை விரிவாக எடுத்துரைக்கும்.
பகிர்வு திட்டத்தை வடிவமைத்தல்
எத்தனை பகிர்வுகள் எவ்வளவு அளவுகளில் தேவை?
வட்டு பகிர்வு தளவமைப்பின் வடிவம் வட்டில் பயன்படுத்தப்படும் முறைமை மற்றும் கோப்பு முறைமையின் தேவைகளை அதிகமாகச் சார்ந்துள்ளது. நிறையப் பயனர்கள் இருந்தால், தனி /home பகிர்வை வைத்துக்கொள்வது பாதுகாப்பை அதிகப்படுத்தி, காப்புநகல் போன்ற பராமரிப்பு பணிகளை எளிமையாக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. ஜெனடூவை ஒரு அஞ்சல் சேவையகமாகச் செயல்படுத்த நிறுவும்போது, எல்லா அஞ்சல்களும் பெரும்பாலும் /var அடைவிற்குள் சேமித்து வைப்பதால் இந்த அடைவு தனி /var பகிர்வாக இருக்க வேண்டும். பெரும்பாலான விளையாடல் சேவையகங்கள் /opt அடைவில் நிறுவப்படுவதால், விளையாட்டு சேவையகங்களுக்காக இதைத் தனி பகிர்வாக வைத்துக்கொள்ளலாம். இந்த பரிந்துரைகளுக்கான காரணம் /home அடைவை ஒத்தது: பாதுகாப்பு, காப்புநகலாக்கம் மற்றும் பராமரிப்பு.
ஜென்டூவில் பெரும்பாலான சூழல்களில், /usr மற்றும் /var அடைவுகளை ஒப்பீட்டளவில் பெரிய அளவாக வைக்கப்பட வேண்டும். /usr ஆனது முறைமையில் உள்ள பெரும்பாலான செயலிகளையும் லினக்ஸ் கர்னலையும் (/usr/src என்னும் இடத்தின் கீழ்) நடத்துகிறது. இயல்பாக, /var ஜென்டூ இ-பில்ட் கருவூலத்தை (/var/db/repos/gentoo என்னும் இடத்தில் உள்ள) நடத்துகிறது. இது கோப்பு முறைமையைப் பொருத்து, பொதுவாக 650 MiB (மெகா எண்ணுன்மிகள்) வரையிலான வட்டு இடைவெளியைப் பயன்படுத்தலாம். இந்த இடைவெளியானது /var/cache/distfiles மற்றும் /var/cache/binpkgs அடைவுகளை தவிர்த்து கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் முறைமையில் சேர்க்கப்படும்போது இந்த அடைவுகளில் முறையே மூலநிரல் கோப்புக்கள் மற்றும் (விரும்பினால்) இருமத் தொகுப்புகளால் மெதுவாக நிரம்பத் துடங்கிவிடும்.
எத்தனை மற்றும் எவ்வளவு பெரிய பகிர்வுகள் என்பது ஈடுசெய்தல்களைக் கருத்தில் கொள்வதிலும், சூழலுக்கு ஏற்றவாறு சிறந்த விருப்பத்தைத் தேர்வு செய்வதிலும் சார்ந்துள்ளது. தனி பகிர்வு அல்லது கனவளவு பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது:
- ஒவ்வொரு பகிர்வு அல்லது கனவளவுக்கும் சிறப்பாகச் செயல்படும் கோப்பு முறைமையைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பகிர்வு அல்லது கனவளவில் செயலிழந்த கருவி ஒன்று தொடர்ந்து கோப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறது என்பதால் ஒட்டுமொத்த முறைமையும் காலி இடைவெளி இல்லாமல் போக வாய்ப்பில்லை.
- தேவைப்பட்டால், பல சரிபார்த்தல்களை இணையாகச் செய்ய முடியும் என்பதால், கோப்பு முறைமை சரிபார்த்தல்களின் நேரத்தைக் குறைக்கலாம் (பல பகிர்விற்குப் பதிலாகப் பல வட்டுக்களைப் பயன்படுத்தும்போது இதன் பயனை முழுமையாகப் பெறலாம்).
- சில பகிர்வு மற்றும் கனவளவுகளைப் படிக்க-மட்டும்,
nosuid
(setuid இருமங்கள் தவிர்க்கப்பட்டு),noexec
(செயல்படுத்தக்கூடிய இருமங்கள் தவிர்க்கப்பட்டு) முதலியவற்றைக் கொண்டு ஏற்றும்போது பாதுகாப்பை அதிகப்படுத்தலாம்.
இருப்பினும், பல பகிர்வு முறையில் குறிப்பிட்ட சில குறைகளும் உள்ளது:
- முறையாக உள்ளமைக்கப்படாத போது, முறைமையின் ஒரு பகிர்வில் அதிகமான இடைவெளியும் மற்றொரு பகிர்வில் குறைவான இடைவெளியும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
- /usr/ கான தனி பகிர்விற்கு, இதை எல்லா துவக்க நிரல்கள் துவங்குவதற்கு முன்பு ஏற்றுவதற்கு ஒரு initramfs ஐ கொண்டு துவக்க வேண்டும். initramfs ஐ உருவாக்கல் மற்றும் பராமரித்தல் இந்த கையேட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதால், புதிய பயனர்களை /usr/ க்கு என்று தனியாக ஒரு பகிர்வைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்
- மேலும் SCSI மற்றும் SATA வட்டுக்கள் GPT வட்டு முத்திரையைப் பயன்படுத்தாத வரை 15 பகிர்வுகள் வரை மட்டுமே பகிர்வு செய்ய முடியும்.
Systemd ஐ பயன்படுத்தும் நோக்கத்திலிருந்தால், வேர் கோப்பு முறைமையின் ஒரு பாகமாகவோ அல்லது initramfs மூலம் ஏற்றப்பட்டோ துவக்கத்தில் /usr/ கிடைக்கும்.
அப்படியென்றால் இடமாற்று இடைவெளி?
இடமாற்று இடைவெளி அளவுக்கு எந்தவொரு மிகச்சரியான மதிப்பும் இல்லை. இந்த இடைவெளியின் வேளை கர்னலுக்கு உள் நினைவகம் (RAM) அழுத்தத்தில் இருக்கும்போது வட்டில் சேமிப்பு இடம் அளிப்பதாகும். இந்த இடமாற்று இடைவெளி கர்னலை உடனடியாக அணுக வாய்ப்பில்லாத நினைவக பக்கங்களை வட்டில் சேமிக்க அனுமதிக்கிறது. இதன்மூலம் இப்போதைய வேளைகளுக்குத் தேவையான RAM நினைவு விடுவிக்கப்படுகிறது. பக்கங்கள் மீண்டும் இடமாற்றும்போது வட்டு உடனடியாக தேவைப்படுவதால், நினைவு பக்கங்களை அதற்கான இடத்தில் எழுதுவதற்கு, RAM இல் இருந்து எழுதுவதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது (உள் நினைவகத்தை ஒப்பிடுகையில் வட்டு மெதுவாக வேளை செய்யக் கூடியது என்பதால்).
அதிகப்படியாக RAM இருந்தால் அல்லது தீவிரமாக நினைவு தேவைப்படும் செயலிகளை முறைமை இயக்கப்போவதில்லை என்றால், ஒருவேளை நிறைய இடமாற்று இடைவெளி தேவைப்படாமல் போகலாம். இருப்பினும் கணினியின் உறக்கநிலையின்போது நினைவகத்தில் உள்ள மொத்த விவரங்களும் இந்த இடைமாற்று இடைவெளியில்தான் சேமித்து வைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளவும் (சேவையக முறைமைகளைத் தவிர பெரும்பாலும் பணித்தள மற்றும் மடிக் கணினிகளில் காணப்படும்). முறைமைக்கு உறக்கநிலை ஆதரவு தேவைப்பட்டால், நினைவகத்தின் அளவை ஒத்த அல்லது அதற்கும் கூடுதலான இடமாற்று இடைவெளி தேவைப்படலாம்.
பொதுவான விதியாக, இடமாற்று இடைவெளியின் அளவு உள் நினைவகத்தின் (RAM) அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கப் பரிந்துரைக்கிறோம். பல வன்தட்டுகள் உள்ள முறைமைகளில், இணை படித்தல்/எழுதல் செயல்களைப் பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு வட்டிலும் ஒரு இடைமாற்று இடைவெளியை உருவாக்குவது அறிவார்ந்த செயலாகும். எவ்வளவு வேகமாக ஒரு வட்டு இடமாற்றுகிறதோ அவ்வளவு வேகமாக இடமாற்று இடைவெளியில் உள்ள தரவுகளை அணுகியவுடன் முறைமை இயங்கும். சுழலக்கூடிய மற்றும் திட நிலை வட்டுகளின் இடையில் ஒன்றைத் தேர்வு செய்யும்போது, சிறந்த செயல்திறனுக்காக திடநிலை வட்டுக்களில் இடமாற்று இடைவெளியை இடுவது நல்லது. மேலும் இடமாற்று கோப்புகளை இடமாற்று பகிர்வுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்; இது மிகக் குறைந்த வட்டு இடைவெளிகளைக் கொண்ட முறைமைகளின் கவனத்தை ஈர்க்கும்.
EFI முறைமை பகிர்வு (ESP) என்றால் என்ன?
இயங்குதளத்தைத் துவக்குவதற்கு BIOS ற்கு பதிலாக UEFI ஐ பயன்படுத்தும் முறைமையில் ஜென்டூவை நிறுவும்போது, EFI முறைமை பகிர்வு (ESP) உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமாகும். கீழுள்ள வழிமுறைகள் இந்த செயலை சரியாகக் கையாளுவதற்குத் தேவையான தகவல்களைக் கொண்டுள்ளன. BIOS/மரபுவழி பயன்முறையில் துவக்குவதற்கு EFI முறைமை பகிர்வு தேவையில்லை.
ESP என்பது ஒரு FAT திரிபாக (சில லினக்ஸ் முறைமைகளில் vfat எனக் காட்டப்பட்டிருக்கும்) இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ UEFI விவரக்குறிப்புகளில் படி FAT32 ஐ ESP க்கு பரிந்துரைக்கப்பட்டாலும், FAT12, 16 அல்லது 32 கோப்பு முறைமைகளும் UEFI திடப்பொருளால் அறிந்தேற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பகிர்விற்குப் பின், ESP ஐ ஏற்றவாறு வடிவமைக்கவும்:
root #
mkfs.fat -F 32 /dev/sda1
FAT திரிபைக் கொண்டு ESP வடிவமைக்கப்படவில்லை என்றால், முறைமையின் UEFI திடப்பொருள் துவக்க ஏற்றியை (அல்லது லினக்ஸ் கர்னலை) கண்டறியாது. இதனால் முறைமையைத் துவக்க முடியாமல் போகலாம்.
BIOS துவக்க பகிர்வு என்றால் என்ன?
BIOS/மரபுவழி பயன்முறையில், BIOS துவக்கப் பகிர்வு GRUB2 வோடு GPT பகிர்வு தளவமைப்பைச் சேர்க்கும் போதுதான் தேவைப்படும். EFI/UEFI பயன்முறையில் துவக்கும்போதும், MBR அட்டவணையைப் பயன்படுத்தும்போதும் இது தேவைப்படாது. இது மிகவும் சிறிய (1 இல் இருந்த 2 மெகா எண்ணுன்மிகள்) பகிர்வாகும். GRUB2 போன்ற துவக்க ஏற்றிகள் ஒதுக்கப்பட்ட சேமிப்பு இடத்தில் பொருந்தாத கூடுதல் தரவுகளை இதில் வைத்துக் கொள்ளலாம். இந்த வழிகாட்டியில் இது பயன்படுத்தப்படாது.
GPT ஐ கொண்டு UEFI ற்காக வட்டை பகிர்வு செய்தல்
பின்வரும் பாகங்கள் fdisk ஐ பயன்படுத்தி GPT / UEFI துவக்க நிறுவலுக்கான எடுத்துக்காட்டு பகிர்வு தளவமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி விளக்குகிறது. எடுத்துக்காட்டு பகிர்வு தளவமைப்பு முன்பு குறிப்பிடப்பட்டுள்ளது:
பகிர்வு | விளக்கம் |
---|---|
/dev/sda1 | EFI முறைமை (மற்றும் துவக்க) பகிர்வு |
/dev/sda2 | இடமாற்று பகிர்வு |
/dev/sda3 | வேர் பகிர்வு |
தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப பகிர்வு தளவமைப்பை மாற்றிக்கொள்ளவும்.
இப்போதுள்ள பகிர்வு தளவமைப்பைக் காணுதல்
fdisk வட்டை பகிர்வுகளாகப் பிரிக்கவல்ல ஒரு புகழ்பெற்ற மற்றும் வலிமையான கருவியாகும். எடுத்துக்காட்டாக fdisk ஐ /dev/sda என்னும் வட்டிற்கு இவ்வாறு பயன்படுத்தவும்.
root #
fdisk /dev/sda
வட்டின் தற்போதைய பகிர்வு உள்ளமைவுகளை காட்டுவதற்கு p என்னும் விசையை பயன்படுத்தவும்:
Command (m for help):
p
Disk /dev/sda: 28.89 GiB, 31001149440 bytes, 60549120 sectors Disk model: DataTraveler 2.0 Units: sectors of 1 * 512 = 512 bytes Sector size (logical/physical): 512 bytes / 512 bytes I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes Disklabel type: gpt Disk identifier: 21AAD8CF-DB67-0F43-9374-416C7A4E31EA Device Start End Sectors Size Type /dev/sda1 2048 526335 524288 256M EFI System /dev/sda2 526336 2623487 2097152 1G Linux swap /dev/sda3 2623488 19400703 16777216 8G Linux filesystem /dev/sda4 19400704 60549086 41148383 19.6G Linux filesystem
இந்த குறிப்பிட்ட வட்டில் இரண்டு லினக்ஸ் கோப்பு முறைமைகளும் (ஒவ்வொன்றும் அதற்குத் தொடர்புடைய பகிர்வுடன் "Linux" எனப் பட்டியலிடப்பட்டுள்ள) அத்துடன் ஒரு இடமாற்று பகிர்வும் ("Linux swap" எனப் பட்டியலிடப்பட்டுள்ள) இடுவதற்கு ஏதுவாக உள்ளமைக்கப்பட்டுவிட்டது.
புதிய வட்டுமுத்திரையை உருவாக்கல் / எல்லா பகிர்வுகளையும் அழித்தல்
வட்டில் புதிய GPT வட்டு முத்திரையை உருவாக்க g விசையை தட்டவும். இது எல்லா இருக்கும் பகிர்வுகளையும் நீக்கிவிடும்.
Command (m for help):
g
Created a new GPT disklabel (GUID: 87EA4497-2722-DF43-A954-368E46AE5C5F).
இப்போதுள்ள GPT வட்டு முத்திரைக்கு (மேலுள்ள p இன் வெளியீட்டைக் காணவும்), வட்டில் ஏற்கனவே இருக்கும் பகிர்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக நீக்குவதைக் கருதினால். d விசையை இட்டுப் பகிர்வை நீக்கவும். எடுத்துக்காட்டாக, ஏற்கனவே இருக்கும் /dev/sda1 பகிர்வை அழிக்க:
Command (m for help):
d
Partition number (1-4): 1
பகிர்வு இப்போது நீக்கலுக்காகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இனிமேல் p மூலம் திரையில் அச்சிடப்படும் பகிர்வுகள் பட்டியலில் இதைக் காண இயலாது என்றாலும் மாற்றங்கள் சேமிக்கப்படாத வரையில் இவை நீக்கப்படாது. இதன்மூலம் ஏதேனும் தவறு நேர்ந்தால் q விசையை உடனடியாக அழுத்தியவுடன் Enter ஐ தட்டி செயலை விட்டு வெளியேறிவிடலாம். பகிரவும் அழிக்கப்படாது.
ஒவ்வொரு முறையும் பகிர்வு பட்டியலைக் காணத் தொடர்ந்து p ஐ அழுத்தி பின் d விசைக்கு அடுத்துப் பகிர்வு எண்ணைக் குறிப்பிட்டு ஒன்றன்பின் ஒன்றாக நீக்கவும். முடிவில், பகிர்வு அட்டவணை காலியாகிவிடும்:
Command (m for help):
p
Disk /dev/sda: 28.89 GiB, 31001149440 bytes, 60549120 sectors Disk model: DataTraveler 2.0 Units: sectors of 1 * 512 = 512 bytes Sector size (logical/physical): 512 bytes / 512 bytes I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes Disklabel type: gpt Disk identifier: 87EA4497-2722-DF43-A954-368E46AE5C5F
இப்போது நினைவில்-உள்ள பகிர்வு அட்டவணை காலியாகிவிட்டதால், நாம் பகிர்வுகளை உருவாக்க ஆயத்தமாகிவிட்டோம்.
EFI முறைமை பகிர்வு (ESP) என்றால் என்ன?
முதலில் /boot என ஏற்றப்படும் ஒரு சிறிய EFI முறைமை பகிர்வை உருவாக்கவும். புதிய பகிர்வை உருவாக்க n என அழுத்தி பின் முதல் பகிர்வைத் தேர்வு செய்வதற்கு 1 என அழுத்தவும். முதல் பிரிவைப் பற்றிக் கேட்கும்போது, அது 2048 இல் தொடங்குகிறதா (துவக்க ஏற்றிக்குத் தேவைப்படலாம்) என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் Enter ஐ தட்டவும். இறுதி பிரிவைப் பற்றிக் கேட்கும்போது 256 மெகா எண்ணுன்மிகள் அளவு கொண்ட ஒரு பகிர்வை உருவாக்க +256M எனத் தட்டச்சு செய்யவும்.
Command (m for help):
n
Partition number (1-128, default 1): 1 First sector (2048-60549086, default 2048): Last sector, +/-sectors or +/-size{K,M,G,T,P} (2048-60549086, default 60549086): +256M Created a new partition 1 of type 'Linux filesystem' and of size 256 MiB.
பகிர்வை EFI முறைமை பகிர்வாகக் குறிக்கவும்:
Command (m for help):
t
Selected partition 1 Partition type (type L to list all types): 1 Changed type of partition 'Linux filesystem' to 'EFI System'.
இடமாற்று பகிர்வை உருவாக்குதல்
அடுத்து, இடமாற்று பகிர்வை உருவாக்குவதற்கு, n என அழுத்தி ஒரு புதிய பகிர்வை உருவாக்கி பின் அதை இரண்டாவது பகிர்வாக (/dev/sda2) குறிக்க 2 எனத் தட்டவும். முதல் பிரிவைப் பற்றிக் கேட்கும்போது Enter ஐ தட்டவும். இறுதி பிரிவைப் பற்றிக் கேட்கும்போது 4 கிகா எண்ணுன்மிகள் அளவு கொண்ட ஒரு பகிர்வை உருவாக்க +4G எனத் தட்டச்சு செய்யவும் (அல்லது இடமாற்று வெளிக்குத் தேவையான அளவை தட்டச்சு செய்யலாம்).
Command (m for help):
n
Partition number (2-128, default 2): First sector (526336-60549086, default 526336): Last sector, +/-sectors or +/-size{K,M,G,T,P} (526336-60549086, default 60549086): +4G Created a new partition 2 of type 'Linux filesystem' and of size 4 GiB.
இவையெல்லாம் முடிந்தபின், பகிர்வு வகையை அமைக்க t ஐ அழுத்திய உடன் உருவாக்கிய இடமாற்று பகிர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு 2 என இட்டு, பகிர்வு வகையை "Linux Swap" என்று அமைப்பதற்கு 19 எனத் தட்டச்சு செய்யவும்.
Command (m for help):
t
Partition number (1,2, default 2): 2 Partition type (type L to list all types): 19 Changed type of partition 'Linux filesystem' to 'Linux swap'.
வேர் பகிர்வை உருவாக்குதல்
இறுதியாக, வேர் பகிர்வை உருவாக்குவதற்கு, n ஐ அழுத்தி ஒரு புதிய பகிர்வை உருவாக்கவும். இதை மூன்றாவது பகிர்வாக (/dev/sda3) குறிப்பதற்கு 3 எனத் தட்டவும். முதல் பிரிவைப் பற்றிக் கேட்கும்போது Enter ஐ தட்டவும். இறுதி பிரிவைப் பற்றிக் கேட்கும்போது Enter ஐ அழுத்துவதன் மூலம் வட்டில் மீதமுள்ள எல்லா இடத்தையும் இந்த பகிர்வு எடுத்துக்கொள்ளும். இந்த படிநிலைகளை எல்லாம் செய்து முடித்தபின், p விசையை அளித்தவுடன் கீழுள்ளதைப் போல ஒரு பகிர்வு அட்டவணையைக் காணலாம்.
Command (m for help):
p
Disk /dev/sda: 28.89 GiB, 31001149440 bytes, 60549120 sectors Disk model: DataTraveler 2.0 Units: sectors of 1 * 512 = 512 bytes Sector size (logical/physical): 512 bytes / 512 bytes I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes Disklabel type: gpt Disk identifier: 87EA4497-2722-DF43-A954-368E46AE5C5F Device Start End Sectors Size Type /dev/sda1 2048 526335 524288 256M EFI System /dev/sda2 526336 8914943 8388608 4G Linux swap /dev/sda3 8914944 60549086 51634143 24.6G Linux filesystem
பகிர்வு தளவமைப்பை சேமித்தல்
பகிர்வு தளவமைப்பைச் சேமித்து fdisk ஐ விட்டு வெளியேற w விசையை இடவும்.
Command (m for help):
w
பகிர்வுகள் உருவாக்கப்பட்டுவிட்டதால், இப்போது அதன் மேல் கோப்பு முறைமைகளை இட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
MBR ஐ கொண்டு BIOS / மரபுவழி துவக்கத்திற்காக வட்டை பகிர்வு செய்தல்
பின்வரும் பாகங்கள் MBR / BIOS மரபுவழி துவக்க நிறுவலுக்கான எடுத்துக்காட்டு பகிர்வு தளவமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி விளக்குகிறது. எடுத்துக்காட்டு பகிர்வு தளவமைப்பு முன்பு குறிப்பிடப்பட்டுள்ளது:
பகிர்வு | விளக்கம் |
---|---|
/dev/sda1 | துவக்க பகிர்வு |
/dev/sda2 | இடமாற்று பகிர்வு |
/dev/sda3 | வேர் பகிர்வு |
தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப பகிர்வு தளவமைப்பை மாற்றிக்கொள்ளவும்.
தற்போதுள்ள பகிர்வு தளவமைப்பைக் காணுதல்
வட்டிற்கு எதிராக fdisk ஐ தொடங்குதல் (எடுத்துக்காட்டாக நாம் /dev/sda ஐ பயன்படுத்தலாம்):
root #
fdisk /dev/sda
வட்டின் தற்போதைய பகிர்வு உள்ளமைவுகளை காட்டுவதற்கு p என்னும் விசையை பயன்படுத்தவும்:
Command (m for help):
p
Disk /dev/sda: 28.89 GiB, 31001149440 bytes, 60549120 sectors Disk model: DataTraveler 2.0 Units: sectors of 1 * 512 = 512 bytes Sector size (logical/physical): 512 bytes / 512 bytes I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes Disklabel type: gpt Disk identifier: 21AAD8CF-DB67-0F43-9374-416C7A4E31EA Device Start End Sectors Size Type /dev/sda1 2048 526335 524288 256M EFI System /dev/sda2 526336 2623487 2097152 1G Linux swap /dev/sda3 2623488 19400703 16777216 8G Linux filesystem /dev/sda4 19400704 60549086 41148383 19.6G Linux filesystem
இதுவரை இந்த குறிப்பிட்ட வட்டில் GPT அட்டவணையைப் பயன்படுத்தி இரண்டு லினக்ஸ் கோப்பு முறைமைகளும் (ஒவ்வொன்றும் அதற்குத் தொடர்புடைய பகிர்வுடன் "Linux" எனப் பட்டியலிடப்பட்டு) அத்துடன் ஒரு இடமாற்று பகிர்வும் இடுவதற்கு ஏதுவாக உள்ளமைக்கப்பட்டுவிட்டது.
புதிய வட்டுக்குறியை உருவாக்கல் / எல்லா பகிர்வுகளையும் அழித்தல்
வட்டில் புதிய MBR வட்டு முத்திரையை (DOS வட்டுமுத்திரை எனவும் அழைக்கப்படும்) உருவாக்க o விசையை தட்டவும். இது எல்லா இருக்கும் பகிர்வுகளையும் நீக்கிவிடும்.
Command (m for help):
o
Created a new DOS disklabel with disk identifier 0xe04e67c4. The device contains 'gpt' signature and it will be removed by a write command. See fdisk(8) man page and --wipe option for more details.
இப்போதுள்ள DOS வட்டு முத்திரைக்கு (மேலுள்ள p இன் வெளியீட்டைக் காணவும்), வட்டில் ஏற்கனவே இருக்கும் பகிர்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக நீக்குவதைக் கருதினால். d விசையை இட்டுப் பகிர்வை நீக்கவும். எடுத்துக்காட்டாக, ஏற்கனவே இருக்கும் /dev/sda1 பகிர்வை அழிக்க:
Command (m for help):
d
Partition number (1-4): 1
பகிர்வு இப்போது நீக்கலுக்காகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இனிமேல் p மூலம் திரையில் அச்சிடப்படும் பகிர்வுகள் பட்டியலில் இதைக் காண இயலாது என்றாலும் மாற்றங்கள் சேமிக்கப்படாத வரையில் இவை நீக்கப்படாது. இதன்மூலம் ஏதேனும் தவறு நேர்ந்தால் q விசையை உடனடியாக அழுத்தியவுடன் Enter ஐ தட்டி செயலை விட்டு வெளியேறிவிடலாம். பகிரவும் அழிக்கப்படாது.
ஒவ்வொரு முறையும் பகிர்வு பட்டியலைக் காணத் தொடர்ந்து p ஐ அழுத்தி பின் d விசைக்கு அடுத்துப் பகிர்வு எண்ணைக் குறிப்பிட்டு ஒன்றன்பின் ஒன்றாக நீக்கவும். முடிவில், பகிர்வு அட்டவணை காலியாகிவிடும்:
Command (m for help):
p
Disk /dev/sda: 28.89 GiB, 31001149440 bytes, 60549120 sectors Disk model: DataTraveler 2.0 Units: sectors of 1 * 512 = 512 bytes Sector size (logical/physical): 512 bytes / 512 bytes I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes Disklabel type: dos Disk identifier: 0xe04e67c4
இப்போது பகிர்வுகளை உருவாக்க ஆயத்தமாகிவிட்டோம்.
துவக்க பகிர்வை உருவாக்குதல்
முதலில் /boot என ஏற்றப்படும் ஒரு சிறிய EFI முறைமை பகிர்வை உருவாக்கவும். புதிய பகிர்வை உருவாக்க n என அழுத்தியவுடன் தொடக்கப் பகிர்விற்கு p என அழுத்தி, பின் முதல் பகிர்வைத் தேர்வு செய்வதற்கு 1 என அழுத்தவும். முதல் பிரிவைப் பற்றிக் கேட்கும்போது, அது 2048 இல் தொடங்குகிறதா (துவக்க ஏற்றிக்குத் தேவைப்படலாம்) என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் Enter ஐ தட்டவும். இறுதி பிரிவைப் பற்றிக் கேட்கும்போது 256 மெகா எண்ணுன்மிகள் அளவு கொண்ட ஒரு பகிர்வை உருவாக்க +256M எனத் தட்டச்சு செய்யவும்.
Command (m for help):
n
Partition type p primary (0 primary, 0 extended, 4 free) e extended (container for logical partitions) Select (default p): p Partition number (1-4, default 1): 1 First sector (2048-60549119, default 2048): Last sector, +/-sectors or +/-size{K,M,G,T,P} (2048-60549119, default 60549119): +256M Created a new partition 1 of type 'Linux' and of size 256 MiB.
இடமாற்று பகிர்வை உருவாக்குதல்
அடுத்து, இடமாற்று பகிர்வை உருவாக்குவதற்கு, n என அழுத்தி ஒரு புதிய பகிர்வை உருவாக்கி பின் p ஐ அழுத்தி, அதை இரண்டாவது பகிர்வாக (/dev/sda2) குறிக்க 2 எனத் தட்டவும். முதல் பிரிவைப் பற்றிக் கேட்கும்போது Enter ஐ தட்டவும். இறுதி பிரிவைப் பற்றிக் கேட்கும்போது 4 கிகா எண்ணுன்மிகள் அளவு கொண்ட ஒரு பகிர்வை உருவாக்க +4G எனத் தட்டச்சு செய்யவும் (அல்லது இடமாற்று வெளிக்குத் தேவையான அளவை தட்டச்சு செய்யலாம்).
Command (m for help):
n
Partition type p primary (1 primary, 0 extended, 3 free) e extended (container for logical partitions) Select (default p): p Partition number (2-4, default 2): 2 First sector (526336-60549119, default 526336): Last sector, +/-sectors or +/-size{K,M,G,T,P} (526336-60549119, default 60549119): +4G Created a new partition 2 of type 'Linux' and of size 4 GiB.
இவையெல்லாம் முடிந்தபின், பகிர்வு வகையை அமைக்க t ஐ அழுத்திய உடன் உருவாக்கிய இடமாற்று பகிர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு 2 என இட்டு, பகிர்வு வகையை "Linux Swap" என்று அமைப்பதற்கு 82 எனத் தட்டச்சு செய்யவும்.
Command (m for help):
t
Partition number (1,2, default 2): 2 Hex code (type L to list all codes): 82 Changed type of partition 'Linux' to 'Linux swap / Solaris'.
வேர் பகிர்வை உருவாக்குதல்
இறுதியாக, வேர் பகிர்வை உருவாக்குவதற்கு, n ஐ அழுத்தி ஒரு புதிய பகிர்வை உருவாக்கியவுடன் p ஐ அழுத்தவும். இதை மூன்றாவது பகிர்வாக (/dev/sda3) குறிப்பதற்கு 3 எனத் தட்டவும். முதல் பிரிவைப் பற்றிக் கேட்கும்போது Enter ஐ தட்டவும். இறுதி பிரிவைப் பற்றிக் கேட்கும்போது Enter ஐ அழுத்துவதன் மூலம் வட்டில் மீதமுள்ள எல்லா இடத்தையும் இந்த பகிர்வு எடுத்துக்கொள்ளும். இந்த படிநிலைகளை எல்லாம் செய்து முடித்தபின், p விசையை அளித்தவுடன் கீழுள்ளதைப் போல ஒரு பகிர்வு அட்டவணையைக் காணலாம்.
Command (m for help):
p
Disk /dev/sda: 28.89 GiB, 31001149440 bytes, 60549120 sectors Disk model: DataTraveler 2.0 Units: sectors of 1 * 512 = 512 bytes Sector size (logical/physical): 512 bytes / 512 bytes I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes Disklabel type: dos Disk identifier: 0xe04e67c4 Device Boot Start End Sectors Size Id Type /dev/sda1 2048 526335 524288 256M 83 Linux /dev/sda2 526336 8914943 8388608 4G 82 Linux swap / Solaris /dev/sda3 8914944 60549119 51634176 24.6G 83 Linux
பகிர்வு தளவமைப்பை சேமித்தல்
பகிர்வு தளவமைப்பைச் சேமித்து fdisk ஐ விட்டு வெளியேற w விசையை இடவும்.
Command (m for help):
w
இப்போது பகிர்வுகளின் மேல் கோப்பு முறைமைகளை இடவேண்டிய நேரம் வந்துவிட்டது.
கோப்பு முறைமைகளை உருவாக்குதல்
முன்னுரை
இப்போது தேவையான பகிர்வுகள் உருவாக்கப்பட்டு விட்டதால், இதில் நாம் ஒரு கோப்பு முறைமையைப் பொருத்தலாம். அடுத்த பக்கத்தில் லினக்ஸ் ஆதரிக்கும் பல்வேறு கோப்பு முறைமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எந்த கோப்பு முறைமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்கனவே அறிந்துள்ள படிப்பவர்கள் ஒரு கோப்பு முறைமையைப் பகிர்வில் பொருத்துதல் இல் தொடரலாம். மற்றவர்கள், கிடைக்கக்கூடிய கோப்பு முறைமைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும்.
கோப்பு முறைமைகள்
லினக்ஸ் பன்னிரண்டிற்கும் அதிகமான கோப்பு முறைமைகளை ஆதரிக்கிறது. ஆயினும் அதில் பலவற்றைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாகும். சில குறிப்பிட்ட கோப்பு முறைமைகள் மட்டுமே amd64 கட்டமைப்பில் நிலையாக உள்ளன. முக்கியமான பகிர்வுகளுக்கு சோதனை வழியில் உள்ள கோப்பு முறைமையைத் தேர்வு செய்வதற்கு முன் அதனைப் பற்றி முழுமையாகப் படித்து பின் அதற்கான ஆதரவு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. ext4 எல்லா-நோக்கத்திற்கும், எல்லா-தளங்களிலும் பயன்படுத்தக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட கோப்பு முறைமையாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு முழுமையற்ற பட்டியலாகும்.
- btrfs
- நிழற்பட நொடியெடுத்தல்,சரிகாண்தொகை மூலம் தானாக சரிசெய்துகொள்ளுதல், வெளிப்படையான இறுக்கல், துணையகங்கள் மற்றும் உட்பொதித்த RAID போன்ற மேம்பட்ட தனிச்சிறப்புகளை அளிக்கக்கூடிய அடுத்த தலைமுறை கோப்பு முறைமையாகும். btrfs ஓடு 5.4.y க்கு முந்திய கர்னல்களை உபயோகிப்பது பாதுகாப்பற்றது. ஏனெனில் மிக தீவிரமான சிக்கல்களுக்கான தீர்வுகள் LTS கர்னல் கிளையின் அண்மை வெளியீடுகளில் மட்டுமே காணப்படுகிறது. கோப்பு முறைமை பழுதாகல் பழைய கர்னல் கிளைகளில் குறிப்பாக 4.4.y விட பழைமையானதில் காணப்படும் இது பாதுகாப்பற்ற மற்றும் எளிதில் பழுதாகக்கூடிய பொதுவான சிக்கலாகும். இறுக்கம் செயல்படுத்தப்பட்ட மற்ற பழைய கர்னல்களில் (5.4.y தவிர்த்து) பழுதாவதற்கான சாத்திய கூறுகள் மிக குறைவு. btrfs இன் எல்லா வகைகளிலும் RAID 5/6 மற்றும் quota குழுக்கள் பாதுகாப்பற்றதாகும். மேலும், உள் துண்டாக்குதல் மூலம் கிடைக்கப்பட்ட காலியிடத்தை df தெரிவிக்கும்போது, ENOSPC யோடு கூடிய கோப்பு முறைமை செயல்பாடுகளை எதிர்மறையாக btrfs தோல்வியடைய செய்ய வாய்ப்புள்ளது (DATA + SYSTEM பெருந்துண்டுகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள, METADATA பெருந்துண்டுகளுக்கு தேவைப்படும் காலியிடம்). கூடுதலாக, btrfs இனுள் உள்ள 128M பரப்பிற்கான ஒற்றை 4K குறிப்பால் காலியிடம் இருந்து பங்கீடிற்கு கிடைக்காமல் செய்யலாம். மேலும் இது btrfs ஐ காலியிடத்தை df தெரிவித்த பின்னர் ENOSPC ஐ திரும்ப செய்கிறது. sys-fs/btrfsmaintenance ஐ நிறுவி அவ்வப்போது இயங்கும் வகையில் உள்ளமைப்பதன் மூலம் ENOSPC சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கலாம். ஆனால் காலியிடம் காணப்பட்டால் இந்த ENOSPC சிக்கலை முழுமையாக தவிர்க்க முடியாது. சில பணிச்சுமைகள் ஒருபோதும் ENOSPC ஐ தாக்காது. இந்த ENOSPC சிக்கல் உங்கள் உற்பத்தியில் ஏற்றுகொள்ள முடியாத அளவில் இருந்தால், நீங்கள் வேறு எதையாவது பயன்படுத்துவது நல்லது. btrfs ஐ பயன்படுத்தினால், தெரிந்த சிக்கல்கள் உள்ள உள்ளமைவுகளை தவிர்க்கவும். ENOSPC சிக்கலை தவிர்த்து, அண்மை கர்னல் கிளைகளில் btrfs இல் உள்ள மற்ற சிக்கல்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள btrfs விக்கி நிலைப்பக்கத்தை பார்க்கவும்.
- ext2
- இது முயற்சி செய்யப்பட்ட, உண்மையான லினக்ஸ் கோப்பு முறைமையாகும். இதில் மீ-தரவு பதிவிடுதல் செயல்முறை இல்லாததால், துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் வழக்கமான ext2 கோப்புமுறைமை சரிபார்த்தல் செயல்களுக்கு சற்று நேரம் செலவாகும். இப்போது மிக விரைவாக நிலைத்தன்மையை சரிபார்க்கவல்ல பதிவிடப்பட்ட புதிய தலைமுறை கோப்புமுறைமைகள் வந்துவிட்டால் இதன் எதிரிணையான பதிவிடப்படாதவற்றை காட்டிலும் இதையே பெரும்பாலானோர் விரும்புகின்றன. பதிவிடப்பட்ட கோப்புமுறைமை முறைமை துவங்கும்போது ஏற்படும் நீண்ட காலதாமதங்களை தவிர்ப்பதோடு கோப்பு முறைமையை நிலையில்லாத தன்மையில் வைத்திருக்கிறது.
- ext3
- ext2 கோப்புமுறைமையின் பதிவிடப்பட்ட பதிப்பு. இது வேகமான மீட்டெடுப்பிற்கான மீ-தரவு பதிவிடுதல் செயல்முறையோடு பல மேம்படுத்தப்பட்ட பதிவிடுதல் பயன்முறைகளான முழு தரவு மற்றும் வரிசையாக்கப்பட்ட தரவு பதிவிடுதல் போன்றவற்றோடு வருகிறது. இது எல்லா சூழல்களிலும் உயர் செயல்திறனை அளிக்கவல்ல HTree உள்ளடக்கத்தை பயன்படுத்துகிறது. சுருக்கமாக, ext3 ஒரு நல்ல, நமபகதன்மை வாய்ந்த கோப்புமுறைமை.
- ext4
- தொடக்கத்தில் ext3 இன் பிளவாக உருவாக்கப்பட்ட ext4 பல புதிய தனிச்சிறப்புகளையும், செயல்திறன் மேம்படுத்தல்களையும் அளிப்பதோடு வட்டின் வடிவமைப்பில் சிறு மாற்றங்கள் செய்து அளவு வரம்பையும் நீக்கியுள்ளது. இது அதிகபட்சமாக 1EB வரையிலான சாதனங்களையும், 16TB வரையிலான ஒரு கோப்பை கையாளும் திறன் கொண்டது. ext4 பண்டைய ext2/3 இணுப்பட தொகுதி ஒதுக்கீட்டிற்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட பெரிய கோப்பு செயல்திறன் மற்றும் குறைந்த துண்டாக்கலை அளிக்கும் பரப்புகளை பயன்படுத்துகிறது. மேலும் ext4 பல அதிக நுட்பமான தொகுப்பு ஒதுக்கீடு வழிமுறைகளை (தாமதமான ஒதுக்கீடு மற்றும் பல்தொகுதி ஒதுக்கீடு) பயன்படுத்துவதால் கோப்பு இயக்கியிற்கு வட்டில் உள்ள தரவு தளவமைப்பை உகந்ததாக்கவல்ல வழிகளை அளிக்கிறது. ext4 எல்லா-நோக்கத்திற்கும் எல்லா-தளங்களிலும் பயன்படுத்தக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட கோப்பு முறைமையாகும்.
- f2fs
- இவ்வகை Flash-Friendly கோப்பு முறைமை சாம்சங் நிறுவனத்தால் NAND மினுக்க நினைவகத்திற்காக உருவாக்கப்பட்டது. Q2 2016 இன்படி இந்த கோப்புமுறைமை குழந்தைதனமானதாக கருதப்பட்டது. ஆயினும் ஜென்டூவை microSD அட்டைகள், USB இயக்ககங்கள் அல்லது இதர மினுக்கம்-சார்ந்த சேமிப்பகங்களில் நிறுவுவதற்கு இது உகந்ததாகும்.
- JFS
- இது IBM இன் உயர்-செயல்திறன் கொண்ட பதிவிடல் கோப்புமுறைமையாகும். எடைக்குறைந்த, விரைவான மற்றும் நம்பிக்கைக்குறிய B+tree சார்ந்த கோப்புமுறைமையான இது பல்வேறு சூழ்நிலைகளிலும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
- ReiserFS
- B+tree ஐ அடிப்படையாகக் கொண்ட பதிவிடப்பட்ட கோப்பு முறைமையான ReiserFS ஒட்டுமொத்தமாக நல்ல செயல்திறனை அளிக்கிறது, குறிப்பாக நிறைய CPU கணிச்சுழல்களின் செலவில் மிகச்சிறிய கோப்புகளைக் கையாளும்போது. பதிப்பு 3 ReiserFS முதன்மை இணைப்பு லினக்ஸ் கர்னலில் உள்ள போதிலும், முதன்முறையாக ஜென்டூ முறைமையை நிறுவும்போது பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுவதில்லை. இதன் புதிய பதிப்புகள் இருந்தாலும், இதற்கு முதன்மை இணைப்பு கர்னலில் கூடுதலாக ஒட்டுப்போட வேண்டி வரும்.
- XFS
- மீ-தரவு பதிவிடலைக் கொண்ட கோப்பு முறைமையான இது திடமான தனிச்சிறப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்தக்கமைகளோடு வருகிறது. பல வன்பொருள் சிக்கல்களை XFS தீர்க்கவில்லை என்றாலும் தொடர் புதுப்பித்தல்கள் மூலம் புதுமையான தனிச்சிறப்புகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
- VFAT
- FAT32 எனவும் அழைக்கப்படும் இது லினக்ஸால் ஆதரிக்கப்பட்டாலும் UNIX அனுமதி அமைப்புகளை ஆதரிப்பதில்லை. இது பெரும்பாலும் மற்ற இயங்குதளங்களான மைக்கிரோசாஃப்ட் WINDOWS மற்றும் ஆப்பிளின் macOS போன்றவற்றோடு ஒத்துச் செயல்படுவதற்குப் பயன்படுத்தப்பட்டாலும் UEFI போன்ற சில முறைமை துவக்க ஏற்றி திடப்பொருளுக்கு முக்கியமான தேவையாகும். UEFI முறைமையைப் பயன்படுத்தும் பயனர்கள் முறைமையைத் துவக்குவதற்கு VFAT ஐ கொண்டு வடிவமைக்கப்பட்ட EFI முறைமை பகிர்வு தேவைப்படும்.
- NTFS
- இந்த "புதிய தொழில்நுட்ப" கோப்பு முறைமை WINDOWS NT 3.1 இல் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் மைக்கிரோசாஃப்ட் WINDOWS இன் மீச்சிறப்பு கோப்பு முறைமையாகும். vfat ஐ போல இதுவும் UNIX அனுமதி அமைப்புகளையும், BSD அல்லது லினக்ஸ் முறையாக வேளை செய்யத் தேவையான விரிவாக்கப்பட்ட பண்புகளையும் சேமிப்பதில்லை. அதனால் இதை பெரும்பாலான வழக்குகளில் பகிர்வாகப் பயன்படுத்தக் கூடாது. இதை மைக்கிரோசாஃப்ட் WINDOWS முறைமையோடு சேர்த்துப் பயன்படுத்தும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும் (இதில் மட்டும் என்பதைக் கவனிக்கவும்).
ஒரு கோப்பு முறைமையைப் பகிர்வில் பொருத்துதல்
பகிர்வு அல்லது கனவளவில் ஒரு கோப்பு முறைமையை உருவாக்க வேண்டும் என்றால், வாய்ப்புள்ள ஒவ்வொரு கோப்பு முறைமைகளுக்கும் தேவையான பயனர்வெளி பயன்கூறு நிரல்கள் உள்ளன. ஒவ்வொரு கோப்பு முறைமையைப் பற்றிய மேலும் விவரங்களுக்குக் கீழுள்ள அட்டவணையில் உள்ள கோப்பு முறைமைகளின் பெயர்களைத் தட்டவும்:
கோப்பு முறைமை | உருவாக்கல் கட்டளை | சிறும குறுந்தகட்டில் உள்ளதா? | தொகுப்பு |
---|---|---|---|
btrfs | mkfs.btrfs | ஆம் | sys-fs/btrfs-progs |
ext2 | mkfs.ext2 | ஆம் | sys-fs/e2fsprogs |
ext3 | mkfs.ext3 | ஆம் | sys-fs/e2fsprogs |
ext4 | mkfs.ext4 | ஆம் | sys-fs/e2fsprogs |
f2fs | mkfs.f2fs | ஆம் | sys-fs/f2fs-tools |
jfs | mkfs.jfs | ஆம் | sys-fs/jfsutils |
reiserfs | mkfs.reiserfs | ஆம் | sys-fs/reiserfsprogs |
xfs | mkfs.xfs | ஆம் | sys-fs/xfsprogs |
vfat | mkfs.vfat | ஆம் | sys-fs/dosfstools |
NTFS | mkfs.ntfs | ஆம் | sys-fs/ntfs3g |
ஒருவேளை, EFI முறைமை பகிர்வு (/dev/sda1) FAT32 ஆக இருந்து வேர் பகிர்வு (/dev/sda3) எடுத்துக்காட்டு பகிர்வு வடிவத்தில் உள்ளது போல ext4 ஆக இருந்தால், பின்வரும் கட்டளையைப் பயன்படுத்தவும்:
root #
mkfs.vfat -F 32 /dev/sda1
root #
mkfs.ext4 /dev/sda3
ext4 ஐ சிறிய பகிர்வில் (8 GiB க்கும் குறைவான) பயன்படுத்தும் போது, கோப்பு முறைமை தேவையான inodes களுக்கு இடமளிக்கும் வகையில் முறையான விருப்பத்தேர்வுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்ய முறையே பின்வரும் கட்டளைகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்:
root #
mkfs.ext4 -T small /dev/<device>
பொதுவாக இது கொடுக்கப்பட்ட ஒரு கோப்பு முறைமைக்கான inodes எண்ணிக்கைகளின் நாலன்றொகுதியாகும். ஏனென்றால், "inode-ற்கு-தலா-எண்ணுன்மிகள்" என்பது 16kB ற்கு ஒன்று என்பதிலிருந்து 4kB ற்கு ஒன்றாகக் குறைகிறது.
இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட பகிர்வில் (அல்லது ஏரண சாதனங்களில்) கோப்பு முறைமையை உருவாக்கவும்.
இடமாற்று பகிர்வை செயல்படுத்துதல்
இடமாற்று பகிர்வுகளைத் துவக்க mkswap கட்டளைப் பயன்படுத்தப்படுகிறது:
root #
mkswap /dev/sda2
இடமாற்று பகிர்வைச் செயல்படுத்த, swapon ஐ பயன்படுத்தவும்:
root #
swapon /dev/sda2
மேலுள்ள கட்டளைகள் மூலம் இடமாற்று பகிர்வை உருவாக்கிச் செயல்படுத்தவும்.
வேர் பகிர்வை ஏற்றுதல்
ஜென்டூ அல்லாத நிறுவல் ஊடகத்தைப் பயன்படுத்தும் பயனர்கள் கீழுள்ள கட்டளையை இயக்கி ஏற்ற புள்ளியை உருவாக்க வேண்டும்:
root #
mkdir --parents /mnt/gentoo
இப்போது பகிர்வுகள் துவக்கப்பட்டுக் கோப்பு முறைமை பொருத்தப்பட்டுவிட்டது. ஆகையால் பகிர்வுகளை ஏற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இதற்கு mount கட்டளையைப் பயன்படுத்தவும். முக்கியமாக, உருவாக்கிய ஒவ்வொரு பகிர்விற்கும் தேவையான ஏற்ற அடைவுகளை உருவாக்க மறந்துவிடாதீர்கள். எடுத்துக்காட்டாக வேர் பகிர்வை இவ்வாறு நாம் ஏற்றலாம்:
root #
mount /dev/sda3 /mnt/gentoo
/tmp/ தனி பகிர்வில் இருக்க வேண்டும் என்றால், ஏற்றியபின் மறவாமல் அதன் அனுமதிகளை மாற்றவும்:
root #
chmod 1777 /mnt/gentoo/tmp
பின்வரும் வழிகாட்டுதல்களில் proc கோப்பு முறைமை (கருநிரலுடன் கூடிய மெய்நிகர் இடைமுகம்) அத்துடன் மற்ற கருநிரல் போலி-கோப்பு முறைமைகளும் ஏற்றப்படும். அதற்கு முன் ஜென்டூ நிறுவல் கோப்புகளை நிறுவ வேண்டும்.