கையேடு:PPC/Portage/கருவிகள்
dispatch-conf
dispatch-conf என்பது ._cfg0000_<name> கோப்புகளை ஒன்றாக்க உதவும் ஒரு கருவியாகும். ._cfg0000_<name> கோப்புகள் CONFIG_PROTECT மாறியால் பாதுகாக்கப்பட்ட அடைவில் உள்ள கோப்பை மேலெழுத Portage விரும்பும்போது இதை உற்பத்தி செய்கிறது.
dispatch-conf மூலம், நிகழும் எல்லா மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டே உள்ளமைவு கோப்புகளுக்கான இற்றைப்படுத்தல்களைப் பயனர்களால் ஒன்றாக்க முடியும். dispatch-conf ஆனது உள்ளமைவு கோப்புகளின் இடையில் உள்ள வேறுபாடுகளைத் திட்டுகளாக (patches) அல்லது RCS சீராய்வு முறைமையைப் பயன்படுத்திச் சேமித்து வைக்கிறது. இதன் பொருள், ஒருவேளை உள்ளமைவு கோப்பை இற்றைப்படுத்தும்போது ஒருவர் பிழை செய்துவிட்டால், எந்த நேரத்திலும் நிர்வாகி அந்த கோப்பை அதன் முந்திய பதிப்பிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
dispatch-conf ஐ பயன்படுத்தும்போது, பயனர்கள் அதனிடம் உள்ளமைவு கோப்பை உள்ளதை உள்ளவாறே வைத்திருக்கவும், புதிய உள்ளமைவு கோப்பை பயன்படுத்தவும், இப்போதைய கோப்பை திருத்தியமைக்கவும் அல்லது மாற்றங்களை ஊடாடல் வழியில் ஒன்றாக்கவும் கேட்டுக்கொள்ளலாம். dispatch-conf ஆனது சில அருமையான கூடுதல் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது:
- கருத்துகளுக்கான இற்றைப்படுத்தல்களை மட்டுமே உள்ளடக்கிய உள்ளமைவு கோப்புகளின் இற்றைப்படுத்தல்களைத் தானியக்கமாக ஒன்றாக்குதல்.
- வெள்ளை இடைவெளிகளின் தொகையில் மட்டுமே மாறுபடக்கூடிய உள்ளமைவு கோப்புகளைத் தானியக்கமாக ஒன்றாக்குதல்.
முதலில் /etc/dispatch-conf.conf கோப்பை திருத்தி, archive-dir மாறியால் குறிப்பிடப்பட்ட அடைவு ஒன்றை உருவாக்கவும். பிறகு dispatch-conf ஐ இயக்கவும்:
root #
dispatch-conf
dispatch-conf ஐ இயக்கும்போது, ஒரு நேரத்திற்கு ஒன்று என்ற முறையில் ஒவ்வொரு மாற்றப்பட்ட உள்ளமைவு கோப்பையும் திறனாய்வு செய்யலாம். இப்போதைய உள்ளமைவு கோப்பை புதிய ஒன்றைக் கொண்டு இற்றைப்படுத்தி (மாற்றி வைத்து) அடுத்த கோப்பிற்குத் தொடர்ந்து செல்ல u விசையை அழுத்தவும். புதிய கோப்பை முற்றிலும் அழித்து (நீக்கி) அடுத்த கோப்பிற்குத் தொடர்ந்து செல்ல z ஐ அழுத்தவும்.n விசையானது இதைத் தவிர்த்து அடுத்த கோப்பிற்குச் செல்ல dispatch-conf ற்கு கட்டளையிடும். வருங்காலத்திற்கு ஒன்றாக்குதலை தள்ளிப்போடுவதற்கு இதைச் செய்யலாம். எல்லா உள்ளமைவு கோப்புகளையும் பார்த்துக் கொண்ட உடன், dispatch-conf ஆனது வெளியேறும். எந்த நிலையிலும் q விசையை அழுத்தினால் செயலியை விட்டு வெளியேறலாம்.
மேலும் தகவல்களுக்கு, dispatch-conf இன் கைமுறை பக்கத்தைக் காணவும். இது எவ்வாறு ஊடாடும் வகையில் இப்போதைய மற்றும் புதிய உள்ளமைவு கோப்புகளை ஒன்றாக்குவது, புதிய உள்ளமைவு கோப்புகளைத் திருத்துவது, கோப்புகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை கூர்ந்தாராய்வது போன்றவற்றை விவரிக்கிறது.
user $
man dispatch-conf
etc-update
etc-update என்பது உள்ளமைவு கோப்புகளை ஒன்றாக்கும் மற்றொரு கருவியாகும். இது dispatch-conf ஐ போல் பயன்பாடுகளை நிறைந்ததாக, பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்றாலும், ஒரு ஊடாடும் ஒன்றாக்குதல் அமைப்பை அளிக்கிறது. மேலும் இது சாரமற்ற மாற்றங்களைத் தானியக்க-ஒன்றாக்குதல் செய்ய வல்லது.
இருப்பினும், dispatch-conf ஐ போல் இல்லாமல், etc-update ஆனது உள்ளமைவு கோப்புகளின் பழைய பதிப்புகளை பேணி காத்து வைப்பதில்லை. கோப்பு இற்றைப்படுத்தியவுடன் பழைய பதிப்பு முழுவதுமாக போய்விடும். மிகக் கவனமாக இருக்கவும், பழைய உள்ளமைவு கோப்புகளை வைத்திருக்க விரும்பினால் etc-update ஐ காட்டிலும் dispatch-conf ஐ பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.
root #
etc-update
ஒளிவு மறைவற்ற மாற்றங்களை ஒன்றாக்கிய பிறகு, இற்றைப்படுத்தல் காத்திருப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட கோப்புகளின் பட்டியல் அளிக்கப்படும். கீழே வாய்ப்புள்ள விருப்பத்தேர்வுகள் காட்டப்பட்டுள்ளன:
Please select a file to edit by entering the corresponding number. (-1 to exit) (-3 to auto merge all remaining files) (-5 to auto-merge AND not use 'mv -i'):
-1
ஐ இட்டால், etc-update ஆனது வெளியேறி வேறு எதாவது மாற்றங்களை இடையில் நிறுத்திவிடும். -3
அல்லது -5
ஆனது, எல்லா பட்டியலிடப்பட்ட உள்ளமைவு கோப்புகளையும் அதன் புதிய பதிப்புகளைக் கொண்டு மேலெழுதும். இதன் காரணமாகத் தானியக்கமாக இற்றைப்படுத்தப்படக் கூடாத உள்ளமைவு கோப்புகளை முதலில் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். இதை எளிமையாக உள்ளமைவு கோப்பின் இடது பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எண்ணை உள்ளிடுவதன் மூலம் செய்து முடிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, நாம் /etc/pear.conf என்னும் உள்ளமைவு கோப்பை தேர்ந்தெடுப்போம்:
/etc/pear.conf மற்றும் /etc/._cfg0000_pear.conf இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளின் துவக்கம் [...] /etc/pear.conf மற்றும் /etc/._cfg0000_pear.conf கான இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளின் முடிவு 1) மூல கோப்பிற்குப் பதிலாக இற்றை கோப்பை மாற்றி வைக்கும் 2) இற்றை கோப்பை அழித்து, மூல கோப்பு எவ்வாறு இருந்ததோ அவ்வாறே வைக்கும் 3) ஊடாடும் வகையில் மூல கோப்பை இற்றை கோப்புடன் ஒன்றாக்கும் 4) வேறுபாட்டை மீண்டும் காண்பிக்கும்
இரண்டு கோப்புகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளைக் காண்பிக்கும். இற்றைப்படுத்தப்பட்ட உள்ளமைவு கோப்பை எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்றால், 1 ஐ அழுத்தவும். இற்றைப்படுத்தப்பட்ட கோப்பு இன்றியமையாததில்லை, அல்லது எந்த புதிய அல்லது பயனுள்ள தகவல்களையும் அளிக்கவில்லை என்றால், 2 ஐ அழுத்தவும். இப்போதைய உள்ளமைவு கோப்பை ஊடாடல் முறையில் இற்றைப்படுத்த வேண்டும் என்றால், 3 ஐ அழுத்தவும்.
ஊடாடல் வழி ஒன்றாக்குதலைப் பற்றி இன்னும் விரிவாக இங்கு எடுத்துரைப்பதில் எந்த பொருளும் இல்லை. இது முழுமை பெறுவதற்காக, இரண்டு கோப்புகளை ஊடாடும் வகையில் ஒன்றாக்கும்போது பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ள கட்டளைகளை நாங்கள் இங்கு பட்டியலிடுகிறோம். பயனர்கள் இரண்டு வரிகள் (மூல வரி மற்றும் முன்மொழிந்த புதிய வரி) மற்றும் ஒரு தூண்டி உடன் வரவேற்கப்படுவார். இந்த தூண்டியில் பின்வரும் கட்டளைகளுள் ஒன்றைப் பயனர் இடலாம்:
ed: திருத்திய பின் இரு பதிப்புகளையும் பயன்படுத்தும். ஒவ்வொன்றிற்கும் ஒரு மேல் தலைப்பு இடப்படும். eb: திருத்திய பின் இரு பதிப்புகளையும் பயன்படுத்தும். el: திருத்திய பின் இடப்பக்க பதிப்பைப் பயன்படுத்தும். er: திருத்திய பின் வலப்பக்க பதிப்பைப் பயன்படுத்தும். e: புதிய பதிப்பைத் திருத்தும். l: இடப்பக்க பதிப்பைப் பயன்படுத்தும். r: வலப்பக்க பதிப்பைப் பயன்படுத்தும். s: அமைதியாக பொது வரிகளைச் சேர்க்கும். v: வெளிப்படையாக பொது வரிகளைச் சேர்க்கும். q: வெளியேறும்.
முக்கியமான உள்ளமைவு கோப்புகளின் இற்றைப்படுத்தலை முடித்த பின், மற்ற எல்லா உள்ளமைவு கோப்புகளையும் பயனர்கள் தானியக்கமாக இற்றைப்படுத்தலாம். இற்றைப்படுத்த வேண்டிய உள்ளமைவு கோப்புகள் எதுவும் இல்லை என்றால் etc-update ஆனது வெளியேறும்.
quickpkg
quickpkg ஐ கொண்டு பயனர்கள் முறைமையில் ஏற்கனவே ஒன்றாக்கப்பட்ட தொகுப்புகளின் காப்பக கோப்புகளை உருவாக்கலாம். இந்த காப்பக கோப்புகளை முன்-கட்டப்பட்ட தொகுப்புகளாகப் பயன்படுத்தலாம். quickpkg ஐ இயக்குவது ஒளிவு மறைவற்ற செயலாகும்: வெறும் தொகுப்புகளின் பெயர்களைக் காப்பக கோப்பில் சேர்க்கும்.
எடுத்துக்காட்டாக, curl, orage மற்றும் procps ஐ காப்பக படுத்த:
root #
quickpkg curl orage procps
முன்-கட்டப்பட்ட தொகுப்புகள் $PKGDIR (இயல்பாக /var/cache/binpkgs/) இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தொகுப்புகள் $PKGDIR/CATEGORY இல் வைக்கப்பட்டிருக்கும்.