கையேடு:X86/நிறுவல்/முடித்தல்
பயனர் மேலாண்மை
அன்றாட பயன்பாட்டிற்காக ஒரு பயனரைச் சேர்த்தல்
வேர் பயனராக ஊனிக்ஸ்/லினக்ஸ் முறைமைகளில் வேளை செய்வது ஆபத்தானது என்பதால் முடிந்த அளவிற்கு இதைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலமாக அன்றாட பயன்பாட்டிற்காக ஒரு பயனர் கணக்கைச் சேர்க்க அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
பயனர் உறுப்பினராக உள்ள குழுக்கள் அவர் என்னென்ன செயல்பாடுகளை நிகழ்த்தலாம் என்பதை வரையறுக்கிறது. பின்வரும் அட்டவணை சில முக்கியமான குழுக்களைப் பட்டியலிடுகின்றன:
குழு | விளக்கம் |
---|---|
audio | ஒலி சாதனங்களை அணுக முடியும். |
cdrom | ஒளியியல் சாதனங்களை நேரடியாக அணுக முடியும். |
floppy | நெகிழ் சாதனங்களை நேரடியாக அணுக முடியும். |
games | விளையாட்டுகளை விளையாட முடியும். |
portage | portage இன் கட்டுப்படுத்தப்பட்ட வளங்களை அணுக முடியும். |
usb | USB சாதனங்களை அணுக முடியும். |
video | ஒளிஉருவை கவரும் வன்பொருளை அணுகவும் வன்பொருள் முடுக்கத்தைச் செய்யவும் முடியும். |
wheel | su வை பயன்படுத்த முடியும். |
எடுத்துக்காட்டாக, larry என்னும் பயனரை உருவாக்கி அவரை wheel, users மற்றும் audio குழுக்களில் உறுப்பினராக்க வேண்டுமென்றால், முதலில் வேர் பயனராக உள்நுழைந்து (வேர் பயனர்களை மட்டுமே புதிய பயனர்களை உருவாக்க முடியும்) பின் useradd கட்டளையை இயக்கவும்:
Login:
root
Password: (வேர் கடவுச்சொல்லை இடவும்)
root #
useradd -m -G users,wheel,audio -s /bin/bash larry
root #
passwd larry
Password: (larry க்கான கடவுச்சொல்லை இடவும்) Re-enter password: (சரிபார்க்க கடவுச்சொல்லை மீண்டும் இடவும்)
பயனர் எப்போதாவது சில பணிகளை வேர் பயனராகச் செய்ய வேண்டும் என்றால் su - வை பயன்படுத்தி தற்காலிகமாக வேர் சிறப்புரிமைகளைப் பெறலாம். மற்றொரு வழி sudo தொகுப்பைப் பயன்படுத்துதல். சரியாக உள்ளமைக்கப்பட்டால் இது மிகவும் பாதுகாப்பானது.
வட்டை சுத்தம் செய்தல்
tarball களை நீக்குதல்
இப்போது ஜென்டூ நிறுவல் முடிந்து முறைமை மறுஇயக்கப்பட்டுவிட்டது, எல்லாம் சரியாக நடந்தால், வன்தட்டில் உள்ள பதிவிறக்கப்பட்ட நிலை3 tarball ஐ நீக்கிவிடலாம். இது / அடைவில் பதிவிறக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
root #
rm /stage3-*.tar.*
இங்கிருந்து எங்குச் செல்வது
ஆவணப்படுத்தல்
இங்கிருந்து எங்குச் செல்வது என்று தெரியவில்லையா? ஆராய்ந்து பயணிக்கப் பல வழிகள் உள்ளன... ஜென்டூ தனது பயனர்களுக்குப் பலவேறு சாத்தியக்கூறுகளை அளிக்கிறது. இதனால் பல ஆவணப்படுத்தப்பட்ட (மற்றும் குறைந்த அளவில் ஆவணப்படுத்தப்பட்ட) தனிச்சிறப்புகளை இந்த விக்கி அல்லது மற்ற ஜென்டூ சார்ந்த துணை-களங்களில் அறிந்துகொள்ளலாம் (கீழுள்ள ஜென்டூ எழிவரி ஐ காணவும்).
படிப்பவர்கள் கண்டிப்பாக ஜென்டூ கையேட்டின் அடுத்த பகுதியான ஜென்டூவோடு வேளை செய்தல் ஐ காண வேண்டும். இதில் மென்பொருளை எவ்வாறு புதிதாக வைத்திருப்பது, கூடுதல் மென்பொருள் தொகுதிகளை எவ்வாறு நிறுவுவது, USE கொடிகள் பற்றிய தகவல்கள், OpenRC init முறைமை மற்றும் ஜென்டூ முறைமை நிறுவலுக்குப் பின் வரும் மேலாண்மை செயல்கள் போன்ற பல பயனுள்ள தலைப்புகளின் கீழ் விளக்கங்கள் உள்ளன.
கையேட்டைத் தவிர, படிப்பவர்கள் சமூக குழுக்களால் அளக்கப்படும் கூடுதல் ஆவணப்படுத்தல்களை ஆராய, தயங்காமல் ஜென்டூ விக்கியின் மற்ற மூளைகளுக்கும் பயணிக்க வேண்டும். ஜென்டூ விக்கி குழுவால் அளிக்கப்படும் ஆவணப்படுத்தல் தலைப்புகளின் மேலோட்டம் ஆனது விக்கி கட்டுரைகளைப் பகுப்பு அடிப்படையில் பட்டியலிடுகிறது. எடுத்துக்காட்டாக, நிகழ் இயலிடமாக்கல் வழிகாட்டி முறைமையை விட்டில் இருப்பதைப்போல் உணர வைக்க வழிகாட்டுகிறது (குறிப்பாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் பேசும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்).
ஜென்டூ எழிவரி
எல்லா ஜென்டூ எழிவரி தளங்களும் ஜென்டூவின் நன்னடத்தைக் கோட்பாடு களால் ஆளப்படுகிறது என்பதைப் படிப்பவர்கள் அறிந்துகொள்ளவும். ஜென்டூ குழுவில் செயல்படுவதைச் சிறப்புரிமையாகக் கருத வேண்டும், உரிமையாக அல்ல. இந்த நன்னடத்தைக் கோட்பாடுகள் எல்லாம் ஒரு காரணத்திற்காக இருக்கிறது என்பதைப் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அஞ்சல் பட்டியல்கள் மற்றும் Libera.Chat இல் புரவல் செய்யப்படும் இணையத் தொடர் அரட்டைகள் (IRC) வலையமைப்பை தவிர, பெரும்பாலான ஜென்டூ இணையதளங்களில் கேள்விகளைக் கேட்க, கலந்துரையாடலைத் துவக்க அல்லது வழுவை இட, ஒரு தளத்திற்கு ஒரு கணக்கு என்னும் அடிப்படையில் தேவைப்படுகிறது.
மன்றங்கள் மற்றும் இணையத் தொடர் அரட்டைகள் (IRC)
எல்லா பயனர்களையும் நாங்கள் ஜென்டூ மன்றங்கள் அல்லது ஏதாவதொரு இணையத் தொடர் அரட்டைகள் அலைத்தடங்களில் புன்முறுவலோடு வரவேற்கிறோம். புதிதாக ஜென்டூவை நிறுவும்போது ஏற்பட்ட சிக்கல் முன்பு யாருக்காவது ஏற்கனவே ஏற்பட்டு அதற்கான தீர்வு சில பின்னூட்டங்களுக்கு பின கிடைத்துள்ளதா என்பதை மன்றங்களில் எளிமையாகத் தேடி அறிந்து கொள்ளலாம். மற்ற பயனர்களின் முதல் ஜென்டூ நிறுவலின்போது ஏற்பட்ட சிக்கல்கள் நிகழும் வாய்ப்பு சிலரை வியப்பில் ஆழ்த்தும். ஜென்டூ ஆதரவு அலைத்தடங்களில் உதவி கேட்பதற்கு முன் இவ்வகை மன்றங்கள் மற்றும் விக்கியில் சிக்கலுக்கான தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அஞ்சல் பட்டியல்கள்
மன்றங்கள் அல்லது IRC களில் புதிதாக ஒரு கணக்கை உருவாக்கி உதவி அல்லது பின்னூட்டலை கேட்பதற்கு விரும்பாமல் மின்னஞ்சல் முறையை விரும்பும் குழு உறுப்பினர்களுக்காக என்றே பல அஞ்சல் பட்டியல்கள் உள்ளன. குறிப்பிட்ட அஞ்சல் பட்டியல்களில் குழுசேர பயனர்கள் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
வழுக்கள்
சில நேரங்களில் விக்கியில் சரிபார்த்தும், மன்றங்களில் தேடியும், IRC அலைதடம் மற்றும் அஞ்சல் பட்டியல்களில் உதவியை நாடியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்றால், பொதுவாக இது ஜென்டூவின் Bugzilla தளத்தில் ஒரு புதிய வழுவை தெரிவிப்பதற்கான அறிகுறியாகும்.
உருவாக்க வழிகாட்டி
ஜென்டூவை உருவாக்குவதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பும் படிப்பாளிகள் உருவாக்கல் வழிகாட்டி ஐ காணலாம். இந்த வழிகாட்டியானது ebuild களை எழுதுதல், eclass களோடு வேளை செய்தல் மற்றும் ஜென்டூ உருவாக்கலுக்குப் பின்னால் உள்ள பொதுவான கருத்துக்களுக்கான வரையறுத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
நிறைவு கருத்துக்கள்
ஜென்டூ திடமான, நெகிழ்வான மற்றும் மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்படும் வழங்கலாகும். ஜென்டூவை இன்னும் எவ்வாறு மேம்பட்டதாக மாற்றுவது என்பதற்கான பன்னூட்டல்களை கேட்பதற்காக உருவாக்குநர் குழு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது.
நினைவூட்டலாக, இந்த கையேட்டை பற்றி எதாவது பின்னூட்டலை தெரிவிக்க விரும்பினால் கையேட்டின் தொடக்கத்தில் உள்ள எவ்வாறு இந்த கையேட்டை நான் மேம்படுத்துவது? பிரிவில் விளக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
எங்கள் பயனர்கள் ஜென்டூவை எவ்வாறு செயல்படுத்த இருக்கிறார்கள் என்பதைக் காண ஆவலாக உள்ளோம்!