கையேடு:HPPA/Portage/கருவிகள்
dispatch-conf
dispatch-conf என்பது ._cfg0000_<name> கோப்புகளை ஒன்றாக்க உதவும் ஒரு கருவியாகும். ._cfg0000_<name> கோப்புகள் CONFIG_PROTECT மாறியால் பாதுகாக்கப்பட்ட அடைவில் உள்ள கோப்பை மேலெழுத Portage விரும்பும்போது இதை உற்பத்தி செய்கிறது.
dispatch-conf மூலம், நிகழும் எல்லா மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டே உள்ளமைவு கோப்புகளுக்கான இற்றைப்படுத்தல்களைப் பயனர்களால் ஒன்றாக்க முடியும். dispatch-conf ஆனது உள்ளமைவு கோப்புகளின் இடையில் உள்ள வேறுபாடுகளைத் திட்டுகளாக (patches) அல்லது RCS சீராய்வு முறைமையைப் பயன்படுத்திச் சேமித்து வைக்கிறது. இதன் பொருள், ஒருவேளை உள்ளமைவு கோப்பை இற்றைப்படுத்தும்போது ஒருவர் பிழை செய்துவிட்டால், எந்த நேரத்திலும் நிர்வாகி அந்த கோப்பை அதன் முந்திய பதிப்பிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
dispatch-conf ஐ பயன்படுத்தும்போது, பயனர்கள் அதனிடம் உள்ளமைவு கோப்பை உள்ளதை உள்ளவாறே வைத்திருக்கவும், புதிய உள்ளமைவு கோப்பை பயன்படுத்தவும், இப்போதைய கோப்பை திருத்தியமைக்கவும் அல்லது மாற்றங்களை ஊடாடல் வழியில் ஒன்றாக்கவும் கேட்டுக்கொள்ளலாம். dispatch-conf ஆனது சில அருமையான கூடுதல் தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது:
- கருத்துகளுக்கான இற்றைப்படுத்தல்களை மட்டுமே உள்ளடக்கிய உள்ளமைவு கோப்புகளின் இற்றைப்படுத்தல்களைத் தானியக்கமாக ஒன்றாக்குதல்.
- வெள்ளை இடைவெளிகளின் தொகையில் மட்டுமே மாறுபடக்கூடிய உள்ளமைவு கோப்புகளைத் தானியக்கமாக ஒன்றாக்குதல்.
முதலில் /etc/dispatch-conf.conf கோப்பை திருத்தி, archive-dir மாறியால் குறிப்பிடப்பட்ட அடைவு ஒன்றை உருவாக்கவும். பிறகு dispatch-conf ஐ இயக்கவும்:
root #
dispatch-conf
dispatch-conf ஐ இயக்கும்போது, ஒரு நேரத்திற்கு ஒன்று என்ற முறையில் ஒவ்வொரு மாற்றப்பட்ட உள்ளமைவு கோப்பையும் திறனாய்வு செய்யலாம். இப்போதைய உள்ளமைவு கோப்பை புதிய ஒன்றைக் கொண்டு இற்றைப்படுத்தி (மாற்றி வைத்து) அடுத்த கோப்பிற்குத் தொடர்ந்து செல்ல u விசையை அழுத்தவும். புதிய கோப்பை முற்றிலும் அழித்து (நீக்கி) அடுத்த கோப்பிற்குத் தொடர்ந்து செல்ல z ஐ அழுத்தவும்.n விசையானது இதைத் தவிர்த்து அடுத்த கோப்பிற்குச் செல்ல dispatch-conf ற்கு கட்டளையிடும். வருங்காலத்திற்கு ஒன்றாக்குதலை தள்ளிப்போடுவதற்கு இதைச் செய்யலாம். எல்லா உள்ளமைவு கோப்புகளையும் பார்த்துக் கொண்ட உடன், dispatch-conf ஆனது வெளியேறும். எந்த நிலையிலும் q விசையை அழுத்தினால் செயலியை விட்டு வெளியேறலாம்.
மேலும் தகவல்களுக்கு, dispatch-conf இன் கைமுறை பக்கத்தைக் காணவும். இது எவ்வாறு ஊடாடும் வகையில் இப்போதைய மற்றும் புதிய உள்ளமைவு கோப்புகளை ஒன்றாக்குவது, புதிய உள்ளமைவு கோப்புகளைத் திருத்துவது, கோப்புகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை கூர்ந்தாராய்வது போன்றவற்றை விவரிக்கிறது.
user $
man dispatch-conf
quickpkg
quickpkg ஐ கொண்டு பயனர்கள் முறைமையில் ஏற்கனவே ஒன்றாக்கப்பட்ட தொகுப்புகளின் காப்பக கோப்புகளை உருவாக்கலாம். இந்த காப்பக கோப்புகளை முன்-கட்டப்பட்ட தொகுப்புகளாகப் பயன்படுத்தலாம். quickpkg ஐ இயக்குவது ஒளிவு மறைவற்ற செயலாகும்: வெறும் தொகுப்புகளின் பெயர்களைக் காப்பக கோப்பில் சேர்க்கும்.
எடுத்துக்காட்டாக, curl, orage மற்றும் procps ஐ காப்பக படுத்த:
root #
quickpkg curl orage procps
முன்-கட்டப்பட்ட தொகுப்புகள் $PKGDIR (இயல்பாக /var/cache/binpkgs/) இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த தொகுப்புகள் $PKGDIR/CATEGORY இல் வைக்கப்பட்டிருக்கும்.