கையேடு:Alpha/Portage/கிளைகள்
ஒரு கிளையைப் பயன்படுத்துதல்
நிலையான
ACCEPT_KEYWORDS மாறியானது முறைமையில் என்ன மென்பொருள் கிளையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வரையறுக்கிறது. இது முன்னிருப்பாக முறைமையின் கட்டமைப்பிற்கான நிலையான மென்பொருள் கிளையைப் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, alpha.
நிலையான கிளையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், நிலையில்லாத மென்பொருளை இயக்குவதன் மூலம் சென்டூ செயற்றிட்டத்திற்கு உதவ செயலாட்சியர் விரும்பினால், கட்டமைப்பு சோதித்தல் கிளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக: ~alpha. எச்சரிக்கையாக இருங்கள், நிலையில்லாத மென்பொருளைப் பயன்படுத்தும்போது சில சிக்கல்கள் ஏற்படலாம், அவ்வாறு எதாவது நேர்ந்தால் வழுவறிக்கையை https://bugs.gentoo.org என்னும் இணையதளத்தில் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
சோதித்தல்
இன்னும் அண்மை மென்பொருளைப் பயன்படுத்த, பயனர்கள் இதற்குப் பதிலாகச் சோதித்தல் கிளையைப் பயன்படுத்துவதைக் கருதலாம். Portage ஐ சோதித்தல் கிளையைப் பயன்படுத்தச் செய்வதற்கு, கட்டமைப்பின் முன் ~ என்னும் குறியைச் சேர்க்கவும்.
சோதித்தல் கிளையானது அதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல் சோதித்தலுக்கானதாகும். இதன் பொருள், உருவாக்குநர்கள் இதைச் செயல்படக்கூடியதாகக் கருதினாலும் இன்னும் இது முழுவதுமாக சோதிக்கப்படவில்லை. சோதித்தல் கிளையைப் பயன்படுத்தும் பயனர்கள் இந்த தொகுப்பில் உள்ள வழுவை கண்டுபிடிக்கும் முதல் ஆளாகக்கூட இருக்கலாம். அத்தகைய வழக்கில், இதைப் பற்றி உருவாக்குநர்கள் அறியும் வகையில் ஒரு வழுவறிக்கையை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
கவனமாக இருக்கவும்; சோதித்தல் கிளையைப் பயன்படுத்தும்போது உறுதி நிலை சிக்கல்கள், குறைபாடான தொகுப்பு கையாளுதல் (எடுத்துக்காட்டாகத் தவறான/காணாத சார்புநிலைகள்), அடிக்கடி இற்றைப்படுத்தல்கள் (இதன் விளைவாக நிறையக் கட்டுதல்கள்) அல்லது உடைந்த தொகுப்புகள் ஆகிய சிக்கல்கள் நேரலாம். சென்டூ எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் எவ்வாறு இடர்பாடுகளைத் தீர்ப்பது என்பதைப் பற்றி அறியாத பயனர்கள் நிலையான மற்றும் சோதிக்கப்பட்ட கிளையிலேயே இருக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
எடுத்துக்காட்டாக, alpha கட்டமைப்பிற்கான சோதித்தல் கிளையைத் தேர்வு செய்வதற்கு, /etc/portage/make.conf ஐ இவ்வாறு திருத்தியமைக்கவும்:
/etc/portage/make.conf
சோதித்தல் கிளையைப் பயன்படுத்துதல்ACCEPT_KEYWORDS="~alpha"
நிலையான கிளையிலிருந்து சோதித்தல் கிளைக்கு மாற்றும்போது, நிறையத் தொகுப்புகள் இற்றைப்படுத்தப்படுவதைப் பயனர்கள் கண்டறியலாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், சோதித்தல் கிளைக்கு மாறிய பின், மீண்டும் நிலையான கிளைக்கு மாறுவது அறைகூவலாக இருக்கலாம்.
சோதித்தல் கிளையோடு நிலையான கிளையைக் கலக்குதல்
package.accept_keywords
குறிப்பிட்ட தொகுப்புகளுக்கு மட்டும் சோதித்தல் கிளையை அனுமதித்து மீதமுள்ள முறைமைக்கு நிலையான கிளையைப் பயன்படுத்துமாறு Portage இடம் கேட்டுக்கொள்ள இயலும். இதைச் செய்ய, தொகுப்பின் பகுப்பு மற்றும் பெயரை /etc/portage/package.accept_keywords இல் சேர்க்கவும். இதற்குப் பதிலாக இங்கு ஒரு அடைவை உருவாக்கி (அதே பெயரில்) அந்த அடைவின் கீழுள்ள கோப்பில் தொகுப்பைப் பட்டியலிடவும் வாய்ப்புள்ளது.
எடுத்துக்காட்டாக, gnumeric ற்கான சோதித்தல் கிளையைப் பயன்படுத்த:
/etc/portage/package.accept_keywords
gnumeric செயலிக்கு மட்டும் சோதித்தல் கிளையைப் பயன்படுத்துதல்app-office/gnumeric
குறிப்பிட்ட பதிப்புகளைச் சோதித்தல்
சோதித்தல் கிளையிலிருந்து ஒரு குறிப்பிட்ட மென்பொருள் பதிப்பைப் பயன்படுத்தி, பின்வரும் பதிப்புகளுக்குச் சோதித்தல் கிளையை Portage பயன்படுத்தாமல் இருக்க, package.accept_keywords இருப்பிடத்தில் பதிப்பைச் சேர்க்கவும். இந்த வழக்கில் = செயற்குறியை பயன்படுத்தவும். மேலும், <=, <, > அல்லது >= செயற்குறிகளை பயன்படுத்திப் பதிப்பின் வரம்பை உள்ளிடலாம்.
எப்படி ஆயினும், பதிப்பு தகவல் சேர்க்கப்பட்டால், செயற்குறியானது கண்டிப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பதிப்பு தகவல் இல்லாமல் செயற்குறியை பயன்படுத்த இயலாது.
பின்வரும் எடுத்துக்காட்டில், சோதித்தல் கிளையிலிருந்தாலும் gnumeric-1.2.13 ஐ நிறுவ அனுமதிக்குமாறு நாம் Portage இடம் கேட்கிறோம்:
/etc/portage/package.accept_keywords
குறிப்பிட்ட பதிப்பு தேர்ந்தெடுத்தலை அனுமதித்தல்=app-office/gnumeric-1.2.13
மறைக்கப்பட்ட தொகுப்புகள்
package.unmask
மறையவிழ்தல் தொகுப்புகளின் பயன்பாட்டை சென்டூ உருவாக்குநர்கள் ஆதரிப்பதில்லை. இதைச் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். package.unmask மற்றும்/அல்லது package.mask ஆகியவற்றிற்குத் தொடர்புடைய ஆதரவு கோரல்களுக்குப் பதில் அளிக்காமலும் போகலாம்.
ஒரு தொகுப்பானது சென்டூ உருவாக்குநர்களால் மறைக்கப்பட்டு, அதற்கான காரணத்தை package.mask கோப்பில் (இயல்பாக இது /var/db/repos/gentoo/profiles/ என்னும் இடத்தில் இருக்கும்) குறிப்பிட்டிருந்த போதிலும், அந்த தொகுப்பைப் பயனர் பயன்படுத்த விரும்பினால், /etc/portage/package.unmask என்னும் கோப்பில் (இது ஒரு அடைவாக இருப்பின், இந்த அடைவில் உள்ள கோப்பில்) விரும்பிய பதிப்பைச் சேர்க்கவும் (பெரும்பாலும் இது தனியமைப்பில் உள்ள package.mask கோப்பில் இருக்கும் அதே வரியாக இருக்கும்).
எடுத்துக்காட்டாக, =net-mail/hotwayd-0.8
ஆனது மறைக்கப்பட்டிருந்தால், அதே வரியை package.unmask இருப்பிடத்தில் சேர்ப்பதன் மூலம் மறையவிழ்தல் செய்யலாம்:
/etc/portage/package.unmask
ஒரு குறிப்பிட்ட தொகுப்பு/பதிப்பை மறையவிழ்தல்=net-mail/hotwayd-0.8
/var/db/repos/gentoo/profiles/package.mask இல் உள்ள பதிவானது தொகுப்பு பதிப்புகளின் வரம்பை உள்ளடக்கியிருந்தால், உண்மையில் தேவைப்படும் பதிப்பு(களை) மட்டும் மறையவிழ்தல் செய்வது இன்றியமையாததாகும். பதிப்புகளை எவ்வாறு குறிப்பிடுவது என்பதைக் கற்றுக்கொள்ள முந்தைய பிரிவைப் படிக்கவும்.
package.mask
குறிப்பிட்ட ஒரு தொகுப்பை அல்லது ஒரு தொகுப்பின் குறிப்பிட்ட ஒரு பதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என Portage இடம் கேட்டுக்கொள்ள இயலும். இதைச் செய்ய, தகுந்த வரியை /etc/portage/package.mask இருப்பிடத்தில் (இந்த கோப்பில் அல்லது இந்த அடைவினுள் உள்ள கோப்பில்) சேர்ப்பதன் மூலம் தொகுப்பை மறைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, gentoo-sources-4.9.16 ஐ விட புதிய கருநிரல் மூலங்களை Portage ஆனது நிறுவுவதைத் தவிர்ப்பதற்கு, பின்வரும் வரியை package.mask இருப்பிடத்தில் சேர்க்கவும்:
/etc/portage/package.mask
4.9.16 ஐ விட உயர்ந்த பதிப்பைக் கொண்டுள்ள gentoo-sources ஐ மறைத்தல்>sys-kernel/gentoo-sources-4.9.16